ஜெயலலிதா வாரிசாக ஓ.பி.எஸ். நிலைநிறுத்தியது... தற்செயல் நிகழ்வு அல்ல - ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை...!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் -
சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டது.
அப்போதைய தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் செல்முறைக்களுக்காக பல்வேறு நாட்களில் 21 படிவங்களில் கையொப்பமிடுவது குறித்து அவர் அரசுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கவில்லை.
எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார்; ஆனால் அது நடக்கவில்லை. 2012ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்செயலான நிகழ்வு அல்ல
மேலும், ஜெயலலிதா மறைந்தவுடன் காலம் தாழ்த்தாமல் முதலமைச்சர் பதவிக்கு தன்னைப் பொறுத்திக் கொள்ள தயாராக இருந்தார் ஓ.பி.எஸ்.
ஜெயலலிதா வாரிசாக ஓ.பி.எஸ். தன்னை நிலை நிறுத்திக்கொண்டது தற்செயலான நிகழ்வு அல்ல. முதலமைச்சர் பதவி பறிபோன ஏமாற்றத்தால் கோபமடைந்த ஓ.பி.எஸ். அரசியல் லாபத்துக்காக தர்மயுத்தம் தொடங்கினார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.