பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் போய் சேராது - ஜெயக்குமார் காட்டம்

O. Panneerselvam
By Nandhini Jun 22, 2022 07:58 AM GMT
Report

தவறான பாதையில் ஓ.பி.எஸ் சென்று கொண்டிருப்பது கவலை அளிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

ஒற்றைத் தலைமை

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்று ஈபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதனால், அதிமுகவில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது.

தேர்தல் ஆணையத்தில் இன்று முறையீடு

இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்தில் இன்று முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதரவாளர்கள் உடனான தீவிர ஆலோசனைக்கு பின் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயக்குமார் பேட்டி

சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார். அப்போது, அதிமுகவில் அராஜகப்போக்கு நிலவுகிறதா? என்ற கேள்விக்கு ஜெயக்குமார் பேசியதாவது -

தவறுமேல் தவறு செய்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் போய் சேராது. ஊரோடு ஒத்துவாழ் என்ற பழமொழிக்கு ஏற்ப ஓ.பன்னீர்செல்வம் நடந்து கொள்ள வேண்டும். தவறான பாதையில் ஓ.பன்னீர்செல்வம் பயணம் செய்து கொண்டிருப்பது கவலை அளிக்கிறது.

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தொண்டர்கள் உணர்வுக்கு ஓ.பன்னீர்செல்வம் மதிப்பு அளிக்க வேண்டும். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிச்சயம் ஓ.பி.எஸ். கலந்து கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார். 

பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் போய் சேராது - ஜெயக்குமார் காட்டம் | O Panneerselvam Admk Tamilnadu Jayakumar