ஈசிஆரில் நடைபெற்று வந்த அதிமுக பொதுக்குழு ஏற்பாடு பணிகள் திடீர் நிறுத்தம்..!
ஓ.பி.எஸ் வியூகம்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எடப்பாடியின் பாய்ச்சலை தடுப்பதற்கு ஓபிஎஸ் டெல்லிக்கு விஜயம் செய்துவிட்டு வந்திருக்கிறார். அங்கு மோடியை சந்தித்த அவர் கட்சி விவகாரங்கள் குறித்து பேசியதாகவும், டெல்லி சரியான சிக்னல் கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் நீதி கேட்டு தொண்டர்களை சந்திக்க தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
சென்னை அதிமுக தலைமைக்கழகத்தில் நிர்வாகிகள் கோரிக்கைக்கு இணங்க அதிமுக ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், அதிமுக தலைமைக்கழகத்தில் நிர்வாகிகள் கோரிக்கைக்கு இணங்க அதிமுக ஆலோசனை கூட்டம் நடந்தது. வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்பட்டது என்றார்.
ஈ.சி.ஆரில் பணிகள் நிறுத்தம்
மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை ஈசிஆர் வி.ஜி.பி.யில் வரும் 11ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, ஈ.சி.ஆர், விஜிபியில் இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அந்த பணிகளை பார்வையிட்டு வந்தனர்.
இந்நிலையில், ஈ.சி.ஆர். விஜிபியில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் இன்று திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரொனா கட்டுப்பாடு இருப்பதால் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றும் இடம் தொடர்பான குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.