அதிமுகவில் நீக்கப்பட்டவர்களுக்கு அதே பொறுப்பு வழங்கப்படும் - ஓ. பன்னீர்செல்வம் அதிரடி
அதிமுகவில் பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டவர்களுக்கு அதே பொறுப்பு வழங்கப்படும் என்று ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இரு தரப்பு ஆதரவாளர்கள் மோதல்
அண்மையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக மாறி மாறி அறிவித்தது கட்சியினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
கடந்த ஜூலை 11ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர்.
இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தலைமை அலுவலகத்தில் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டது. இரு தரப்பு ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதால், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஓபிஎஸ் அணி கூண்டோடு நீக்கம்
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் அணி கூண்டோடு நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் அணியினர், ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உட்பட 18 பேரும், வெல்லமண்டி நடராஜன், சையது கான், எஸ்.ஏ.அசோகன், ஓம் சக்தி சேகர் ஆகியோரை நீக்கம் செய்வதாக அறிவித்தார். நீக்கம் செய்யப்பட்டவர்களுடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

ஓ.பன்னீர் செல்வம் கடிதம்
இன்று அதிமுகவின் 7 வங்கிக்கணக்குகளை முடக்கக் கோரி ஓ.பன்னீர் செல்வம் ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தேர்தல் ஆணையத்தின் படி நான் தான் பொதுச்செயலாளர் என்று அதில் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டிருப்பதாகவும், திண்டுக்கல் சீனிவாசன் கையெழுத்திட்ட காசோலை ஏற்கப்பட்டதாக கூறிய நிலையில், இக்கடிதத்தை ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பொறுப்பு
இந்நிலையில், அதிமுகவிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கு, அவர்களது வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் அதே பொறுப்பில் சேர்க்கப்படுவார்கள் என்றும், காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.