ஓபிஎஸ் தாய் மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

M K Stalin Tamil nadu O. Panneerselvam
By Sumathi Feb 25, 2023 03:02 AM GMT
Report

 ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தாயார் மறைவு

அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர். ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95) உடல்நலம் பாதித்து தேனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு அவரது தாயார் உடல்நிலை மிகவும் மோசமானது.

ஓபிஎஸ் தாய் மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் | O Panneer Selvam Mother Passed Away Stalin Tweet

இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து அவரை பெரியகுளத்தில் உள்ள இல்லத்திற்கு குடும்பத்தினர் அழைத்து சென்றனர். பின்னர், நேற்றிரவு 10.20 மணியளவில் அவர் காலமானார். பழனியம்மாள் இறப்பு குறித்து உடனடியாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் சென்னையில் இருந்து பெரியகுளத்திற்கு புறப்பட்டார்.

ஸ்டாலின் இரங்கல்

இறந்த பழனியம்மாளுக்கு ஓ.பன்னீர்செல்வம், ஓ.ராஜா உட்பட 5 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இதையடுத்து பெரியகுளத்தில் உள்ள வீட்டில் பழனியம்மாள் நாச்சியாரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. பழனியம்மாள் நாச்சியாரின் இறுதிச்சடங்கு பெரியகுளத்தில் உள்ள வீட்டில் இன்று நடக்கிறது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அருமைத் தாயார் பழனியம்மாள் மறைவெய்தினார் என்பதை அறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் பன்னீர்செல்வதுக்கு இத்துயர்மிகு தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் ” என இரங்கல் தெரிவித்துள்ளார்.