இந்திய அணி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்த் திணறல் - இந்தியாவுக்கு 165 ரன்கள் இலக்கு
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது.
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் போட்டி தொடங்கியது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.
அதன்படி இப்போட்டியில் நியூநிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் டெய்ரி மிட்செல் ரன் எதுவும் எடுக்காமல் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
அதற்கு அடுத்துவந்த மார்க் சாப்மேன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் மார்டின் குப்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால் இருவரும் அரைசதம் அடித்தனர். அதேநேரத்தில் நியூசிலாந்து அணியின் ரன்ரேட் உயர்ந்தது. மார்க் சாப்மேன் 63 ரன்னிலும், குப்டில் 70 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்துவந்த வீரர்கள் சொதப்பினர்.
இதனால் ரன்ரேட் அப்படியே சரிந்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார், அஸ்வின் தலா 2 விக்கெட்களையும், தீபக் சாகர், முகமது சிராஜ் தலா ஒரு விகெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்கிறது.