கோழிக்கறி சாப்பிட்ட செவிலியர் உயிரிழப்பு - கேரளாவில் சோகம்
கேரளாவில் உணவகத்தில் ஆல்ஃபாம் சிக்கன் சாப்பிட்ட நர்ஸ் ஒருவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு, உயிரிழந்ந சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடல்நலக்குறைவு
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பிளாமுட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மனைவி ரேஷ்மிராஜ் (33). கோட்டயம் மருத்துவக் கல்லூரியின் நியூரோ ஐசியூ பிரிவின் செவிலியரான இவர், மருத்துவக் கல்லூரி செவிலியர் விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 29ம் தேதி மாலை சங்கராந்தியை முன்னிட்டு மலப்புரம் குழிமந்தி என்ற ஹோட்டலில் இருந்து அல்ஃபாம் சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்டார்.

சாப்பிட்ட பிறகு இரவில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, விடுதியில் இருந்த சக ஊழியர்கள் அவரை மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை வென்டிலேட்டருக்கு மாற்றப்பட்டார்.
கெட்டுப்போன சிக்கனால் செவிலியர் உயிரிழப்பு
சிறுநீரக தொற்று காரணமாக, அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது, ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகே முழு விவரம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். டிசம்பர் 29ம் தேதி இதே ஹோட்டலில் இருந்து சாப்பிட்ட மேலும் 26 பேர் வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது.
அவர்கள் ஐசிஎச் மற்றும் குடமலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதன் காரணமாக நேற்று சுகாதாரத் துறையினர் இந்த ஓட்டலின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தது கடைக்கு சீல் வைத்தனர்.