முகமது நபி குறித்து சர்ச்சை பேச்சு - பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங் மீண்டும் கைது
முகமது நபி குறித்து சர்ச்சையாக பேசிய தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங்கை மீண்டும் போலீசார் கைது செய்தனர்.
நுபுர் சர்மா சர்ச்சைப் பேச்சு
இஸ்லாமியர்களின் இறை தூதரான முகமது நபி குறித்து சமீபத்தில் டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா இழிவான வகையில் பேசியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.
இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கவே பல்வேறு அரபு நாடுகளும் தங்களது கண்டனத்தை இந்தியாவிற்கு தெரிவித்தது. இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனிடையே நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன. முகமது நபி குறித்து இழிவான வகையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில் பல்வேறு இடங்களிலும் நுபுர் சர்மா மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.

மீண்டும் ஒரு சர்ச்சை
நுபர்ஷர்மாவின் தலைக்கு பல கோடிகளும் பரிசாக நிர்ணயிக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியது. அதன் அதிர்வலைகளை ஓய்வதற்குள் மீண்டும் ஒரு அவதூறு வீடியோ வெளியாகி பெரும் கண்டனத்தை பெற்றுள்ளது.
பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங்
நுபுர் ஷர்மாவின் பானியில் நபிகள் நாயகம் குறித்து தெலுங்கானா பா.ஜ.க. எம்.எல்.ஏ.ராஜா சிங் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ முடிவடையும் போது நான் பேசிய அனைத்தும் வெறும் நகைச்சுவைதான் என்று ராஜாசிங் கூறியிருக்கிறார்.
இவர் பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதற்கு பலர் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர். வீடியோவில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய ராஜா சிங்கை கைது செய்ய வேண்டும் என்று இஸ்லாமியர்கள் பலர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, நேற்று முன்தினம் அதிகாலை பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங்கை ஐதராபாத் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதன் பின் ராஜா சிங் சஞ்சல் கூடா சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், சில மணிநேரங்களில் அவர் ஜாமீனில் விடுதலையானார்.

மீண்டும் கைது
இந்நிலையில், முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய பேச்சால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங்கை மீண்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.