நுபுர் சர்மாவுக்கு ஆதரவளித்த மருந்துகடைக்காரர் வெட்டிக்கொலை - சிறையில் குற்றவாளி மீது சக கைதிகள் தாக்குதல்
முகமது நபி குறித்து இழிவு கருத்து
இஸ்லாமியர்களின் இறை தூதரான முகமது நபி குறித்து அண்மையில் டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா இழிவான வகையில் பேசியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.
இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கவே பல்வேறு அரபு நாடுகளும் தங்களது கண்டனத்தை இந்தியாவிற்கு தெரிவித்தது. இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனிடையே நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன. முகமது நபி குறித்து இழிவான வகையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில் பல்வேறு இடங்களிலும் நுபுர் சர்மா மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.
மருந்துக்கடைக்காரர் கொலை
இதற்கிடையில், மராட்டிய மாநிலம், அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்தவர் உமேஷ் கோலி. மருந்துக்கடை நடத்தி வந்த இவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்து சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டார்.
இதனையடுத்து, இவர் கடந்த மாதம் 21-ம் தேதி இரவு தன் மருந்துக்கடையை மூடிவிட்டு வீடு திரும்பும்போது, இவரை பின்தொடர்ந்து வந்த 2 பேர் உமேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இக்கொலை நாடு முழுவதும் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இக்கொலையில் ஈடுபட்ட இர்பான் கான், ஷாரூக் பதான் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து, மும்பையில் உள்ள அர்தூர் சாலை சிறையில் அடைத்துள்ளனர்.

சக கைதிகள் தாக்குதல்
இந்நிலையில், மருந்துக்கடைக்காரரை கொலை செய்த குற்றவாளி ஷாருக் பதான் மீது சக கைதிகள் இன்று சிறையில் சரமாரி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இத்தாக்குதலில் ஷாருக் பதானுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஷாருக் பதான் மீது தாக்குதல் நடத்திய சக கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.