நுபுர் ஷர்மாவை கைது செய்ய இடைக்காலத்தடை - உச்சநீதிமன்றம்
முகமது நபி குறித்து இழிவு கருத்து
இஸ்லாமியர்களின் இறை துாதரான முகமது நபி குறித்து அண்மையில் டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா இழிவான வகையில் பேசியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கவே பல்வேறு அரபு நாடுகளும் தங்களது கண்டனத்தை இந்தியாவிற்கு தெரிவித்தது.
இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன. முகமது நபி குறித்து இழிவான வகையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில் பல்வேறு இடங்களிலும் நுபுர் சர்மா மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.
நுபுர் சர்மாவிற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
இந்த வழக்குகளை டெல்லிக்கு மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் நுபுர் சர்மாவிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசி விடமுடியாது. நாட்டில் தற்போது நடப்பதற்கு இந்த பெண்மணியே பொறுப்பு. நுபுர் சர்மா தம்முடைய கருத்துகளை வாபஸ் பெற்றது என்பது காலம் தாழ்த்திய செயல். நுபுர் சர்மா தமது உயிருக்கு ஆபத்து என்கிறார். அவரால்தான் இந்த ஒட்டுமொத்த நாட்டுக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தார்கள்.
கைது செய்ய இடைக்காலத் தடை
இந்நிலையில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் நுபுர் ஷர்மாவை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நுபுர் வர்மாவுக்கு எதிராக வழக்குகள் பதிவான மாநிலங்கள் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
