இலங்கையில் போராட்டகாரர்களை இரவு முழுக்க அரணாக காத்த கன்னியாஸ்திரிகள் - குவியும் பாராட்டு
இலங்கையில் இரவு முழுக்க தூங்காமல் போராட்டகாரர்களை அரணாக காத்த கன்னியாஸ்திரிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஆளும் அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பியுள்ளது. அங்கு இலங்கை மக்கள் நடத்தி வரும் போராட்டத்தால் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தற்போது குடும்ப உறுப்பினர்களோடு திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
அவரின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கியதால் அங்கு கலவரம் வெடித்தது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களால் அதிகாலையில் எம்.பி.க்கள் உள்பட 35 அரசியல்வாதிகளின் வீட்டை தீவைத்து கொளுத்தப்பட்டது. இதில் ராஜபக்சவின் பூர்வீக பழைய வீடும் தீக்கிரையானது.
இந்த போராட்டத்தை ஒரு மத மோதல் போல மாற்றலாம் என்று இலங்கை அரசு முயன்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பல இடங்களில் இவர்களே கலவரத்தை ஏற்படுத்தி மக்கள் மத ரீதியாக அடித்துக்கொண்டதாக கிளப்பி விட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் தான் நேற்று இலங்கை போராட்டத்தின் போது கோ கோட்ட காம பகுதியில் மக்கள் அதிகம் பேர் கூடினர். அப்போது அங்கு மத ரீதியாக மோதல் நடக்கக்கூடாது என்பதற்காக கிறிஸ்துவ பெண் கன்னியாஸ்திரிகள் ஒன்று கூடி அரணாக நின்று மக்களை காத்தனர். இரவில் போராட்டம் நடக்கும் இடத்தில் கலவரக்காரர்கள் நுழையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதால் இவர்கள் இரவு முழுக்க தூங்காமல் கோட்ட கோ காம பகுதியிலேயே தங்கி மக்களை காத்தனர்.மத ஒற்றுமையின் அடையாளமாக இந்த சம்பவம் பார்க்கப்படும் நிலையில் அந்த கன்னியாஸ்திரிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.