தனித்துப் போட்டி.. சமூகநீதியை காக்க போராடிக் கொண்டிருப்பவர்கள் நாங்கள் - சீமான் பேச்சு!
திராவிட கட்சிகள் எதுவும் சாதிவாரி கணக்கு எடுக்கமாட்டார்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான்
தருமபுரி மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தருமபுரி நான்கு ரோடு சந்திப்பில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பெப்ஸியை சீமான் "நீண்டகாலமாக நாங்கள் தனித்துப் போட்டியிடுகின்றோம் என்பதை கவனித்து இருப்பீர்கள்.
எங்களது அரசியல் முழுக்க முழுக்க வேறானது. ஆணுக்குப் பெண் சமமானவர்கள் என்றார்கள். நாங்கள் ஆணும் பெண்ணும் சமம் என்கிறோம். சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல், மக்களவை தேர்தல் என அனைத்திலும் நம் குல பெண்களுக்கு சமவாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சமூக நீதியை காப்பாற்றுவதற்காக போராடிக் கொண்டிருக்கும் பிள்ளைகள் நாங்கள். அதன் அடிப்படையிலேயே வாய்ப்புகள் கொடுக்கிறோம்.
அளந்து கொடுங்கள்
இதே தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, பாமக நிறுவனர் ராமதாஸ் சமூகநீதி பேசிவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைக்கலாமா என்று கேள்வி எழுப்பினார். இதே திமுக அன்று பாஜகவுடன் கூட்டணி வைக்கும்போது பாஜக சமூகநீதி பற்றி பேசிக்கொண்டிருந்ததா?
அவர்களுடைய கோட்பாடு சமூகநீதிக்கு எதிரானது. அப்போது நீங்கள் எதற்கு கூட்டணி வைத்தீர்கள்? இவர்கள் திடீர் திடீர் என்று புனிதம் ஆகிவிடுவார்கள். குடிவாரி கணக்கெடுங்கள், சாதிவாரி கணக்கெடுங்கள் என்று பல ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இந்த திராவிட கட்சிகள் எதுவும் சாதிவாரி கணக்கு எடுக்கமாட்டார்கள். எங்களுடைய கோட்பாடு வேறு. எடுத்துக் கொடுக்காதீர்கள், எண்ணி கொடுங்கள். அள்ளிக் கொடுக்காதீர்கள், அளந்து கொடுங்கள் என்று சொல்கிறோம்” என சீமான் பேசியுள்ளார்.