சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மையா? ஆதாரங்கள் சொல்வது என்ன!
பிரபாகரனை சீமான் சந்தித்தது குறித்த விவகாரம்தான் பூகம்பமாய் வெடித்துள்ளது.
சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து நிற்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருவது வழக்கம்.
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், "அந்த புகைப்படத்தை அவர் சீமானுக்கு பரிசளிக்கப் போவதாக கூறி செங்கோட்டையன் என்ற நண்பர் அந்த புகைப்படத்தை எடிட் செய்ய சொல்லி கேட்டுக் கொண்டார். பிறகு, அந்த புகைப்படமே சந்திப்புக்கான ஆதாரமாக ஊடகங்களில் பகிரப்பட்டன.
இன்றைய தலைமுறைக்கு பிரபாகரன் என்றால் சீமானுக்கு ஆமைக்கறி சமைத்துக் கொடுத்தவர் என்று நினைவுக் கொள்ளும்படி செய்துள்ளார் சீமான். சமீப காலமாக, தமிழர்களுக்காக குரல் கொடுத்த பெரியாரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். இனிமேலும் இதை சொல்லாமல் இருக்க முடியாது என்ற கட்டாயத்தினால் இதை சொல்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனுடன் சந்திப்பு?
தொடர்ந்து ''டைம் ட்ராவல் செய்து 2009-ம் ஆண்டிலேயே ஏ.ஐ தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டு புகைப்படத்தை எடிட் செய்திருப்பார் போல'' என்று அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக 2018ல் மதுரையில் பேசியிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரபாகரனோடு சீமான் புகைப்படம் எடுக்கவில்லையென்றும் கிராபிக்ஸில் அதுபோல புகைப்படம் உருவாக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால் இதுகுறித்து சீமான் கூறுகையில், "என்ன நடந்தது என்று யாருக்கு தெரியும்? சந்தித்தது நானும் அவரும். மூன்று கி.மீ.க்கு இருட்டுக்குள் ஓடுகிறது வண்டி. கூட்டிட்டு வந்த போராளிகள் இறங்கி விட்டனர், அண்ணன் நடேசன்தான் வாகனம் ஓட்டுகிறார். மூன்று கி.மீக்கு மின்சாரமே கிடையாது. அடர்ந்த காட்டுக்குள் சந்திக்கிறோம். அருகில் யாருமே கிடையாது" என்றார்.
மேலும் இந்த விவகாரம் பூகம்பமாய் வெடித்த நிலையில் அக்கட்சி தலைமை நிலையச் செயலாளர் கு.செந்தில் குமார், " விடுதலை புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு. அப்படிப்பட்ட அமைப்பின் தலைவரோடு சந்தித்ததாக பொய் கூற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
இது 17 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான புகைப்படம். சங்ககிரி என்பவர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படத்தை எடிட் செய்திருப்பதாக கூறினால், அவர் மீது தான் வழக்கு தொடர வேண்டும். சில கட்சிகள் மாவீரன் தினத்தை ஒரு சடங்காக மட்டுமே நடத்தி வந்தனர்.
அதனை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்ந்தது நாங்கள்தான். பிரபாகரன் மீது இங்குள்ள மக்கள் சிலருக்கு ஈர்ப்பும் மரியாதையும் உண்டு. அந்த மக்களின் ஆதரவை தாங்கள் பெற வேண்டும் என்பதற்காகவே எங்கள் கட்சிக்கு எதிராக அவதூறு பரப்பி வருகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.