உனக்கு பைத்தியம் பிடித்துள்ளது - செய்தியாளரிடம் ஆவேசமான சீமான்
செய்தியாளர் சந்திப்பில் சீமான், செய்தியாளர் ஒருவரை ஒருமையில் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீமான் செய்தியாளர் சந்திப்பு
புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைப்பெற்றது. இதன் பின்னர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதில் பேசிய அவர், "வயிறு நிறைய பசி வைத்துக் கொண்டு வானூர்தியில் போவதும், மெட்ரோ ரயில் வருவதும் தான் வளர்ச்சியா. மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லாதது.

சாலையை சரியாக போடவில்லை. பஸ்கள் சரியாக இயங்கவில்லை. இதை ஒழுங்காக செய்யலாம். இதை விட்டு வாகன நெரிசலை சாலையில் ஏற்படுத்தி விட்டனர். அதற்கு ரூ.72 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் கட்டி அதில் பறக்கும் விமானங்கள் அரசுடையதா?, தனியார் முதலாளிகளுடையதா? மெட்ரோ ரயில் திட்டம் இந்தியாவுடையதா. உலக வங்கியுனுடையதா. எங்கள் ஆட்சியில் அதற்கெல்லாம் இடம் கொடுக்க மாட்டோம் என பேசினார்.
மேலும், "SIR கொண்டுவரும்போது மமதா பானர்ஜி எதிர்த்து மக்களை திரட்டி போராடுகிறார். ஆனால் SIRஐ தமிழ்நாட்டில் செயல்படுத்தும் கட்சி, ஆட்சி யாருடையது?
அங்கன்வாடி, சத்துணவில் வேலை செய்பவர்களை பூத் அதிகாரிகளாக நியமித்து கணக்கெடுக்க அனுப்பியது யார்? திமுக தானே? என கேட்டார்.
"தேர்தல் ஆணையம் சொல்லும்போது செய்துதானே ஆக வேண்டும்" என செய்தியாளர் அதற்கு பதிலளித்த போது சீமான் ஆவேசமடைந்தார்.
ஆவேசமான சீமான்
அப்போது பேசிய அவர், " உனக்கு என்ன தம்பி பிரச்சனை? தேர்தல் ஆணையம் சொல்வதை அரசு கேட்கனுமா? அல்லது அரசு சொல்வதை தேர்தல் ஆணையம் கேட்கனுமா? தொடக்கத்தில் இருந்தே உனக்கு ஏதோ பிரச்சனை இருக்கு.

உன்னை இன்றைக்கு அல்ல, ரொம்ப நாளாக உன்னைபார்க்கிறேன். பைத்தியம் ஆகிட்ட என்று நினைக்கிறேன். நீ மரியாதையாக கேள்வி கேளுடா, டேய் நீ முதல்ல கேள்வி கேட்க கத்துக்கிட்டு வாடா.
காமெடி பண்ணிட்டு அலையாதே. ஒரு மைக்கையும், கேமராவையும் தூக்கிட்டு வந்தா பெரிய வெங்காயமாடா நீ" என ஆவேசமாக கத்தினார்.