சிறையில் அடைத்த முதல்வருக்கு நன்றி - ஜாமீனில் வந்த நாதக கார்த்திகா பேட்டி
ntk karthika says thanks to cm vijay for jailed: சிறையிலிருந்து ஜாமீனில் வந்த நாதக நிர்வாகி கார்த்திகா, சிறையில் அடைத்த முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஜாமீனில் வந்த நாதக கார்த்திகா
தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகா, தேர்தல் பிரச்சாரத்திக்கின் போது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கார்த்திகாவுடன் கைது செய்யப்பபட்ட அவரது கணவர் முருகு சந்திரகுமார் உள்ளிட்ட 9 பேருக்கு, 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கார்த்திகா உள்ளிட்டோர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனையடுத்து, கார்த்திகா உட்பட 9 பேருக்கும் தாராபுரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறையிலிருந்து வந்த கார்த்திகா உட்பட 9 பேருக்கு நாம் தமிழர் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிறையில் அடைத்த முதல்வருக்கு நன்றி
சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் பேசிய அவர், “வெள்ளைக்காரனை எதிர்த்து பொருளாதார விடுதலை வேண்டும் என தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கப்பல் ஓட்டிய வ.உ.சிதம்பரனார் இருந்த கோவை மத்திய சிறைச்சாலை இது.
இந்த சிறையில் பொய் குற்றங்களை சுமத்தி, ஆதாரமற்ற குற்றங்களை சுமத்தி எங்களை சிறையில் தள்ளிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்க்கு எங்களுடைய நன்றிகள். இத்தகைய வரலாற்று பெருமைமிக்க சிறைச்சாலையில் நாங்கள் இருந்தோம் என்பது எங்களுக்கு வாழ்நாள் பெருமை.

இறுதிநாள் பரப்புரையில் முதலமைச்சர் விஜய் மட்டும் தான் பரப்புரை செய்ய வேண்டும், மற்ற கட்சி வேட்பாளர்கள் யாரும் பரப்புரை செய்யக்கூடாது என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது.
அந்த உரிமையை எப்படி மறுக்க முடியும்? இது ஜனநாயக மீறல் இல்லையா? நான் ஊழல் குற்றவாளி கிடையாது. ஓம்சக்தி, பராசக்தினு இனிமே ஆட்சியை கடத்திட முடியாது” என்று ஆவேசமாகப் பேசினார்.