"இது என் நாடு, என் நிலம், அதை பாதுகாக்க சண்ட செய்யணும்..சண்ட செய்றேன்" - சீமான் பேட்டி
வெற்றி மாறனின் வட சென்னை படத்தைப் போல தான் சண்டை செய்வதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
பிரபாகரனின் பிள்ளைகள் இதற்கெல்லாம் பயப்பட மாட்டார்கள். நீங்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதியை பார்த்து அரசியல் செய்ய வந்தீர்கள். நான் பிரபாகரனைப் பார்த்து அரசியல் செய்ய வந்தவன்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக நாகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவரிடம், நாம் தமிழர் மேடையில் திமுகவினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த சீமான்,
'திமுகவினரின் தாக்குதலை வரவேற்கிறோம். அதை அவர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என விரும்புகிறோம்.
என் தம்பி வெற்றி மாறன் எடுத்த படம் வடசென்னையைப் போல இது என் நாடு, என் நிலம், அதை பாதுகாக்க சண்ட செய்யணும் இல்லையா. சண்ட செய்றேன்.
பிரபாகரனின் பிள்ளைகள் இதற்கெல்லாம் பயப்பட மாட்டார்கள். நீங்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதியை பார்த்து அரசியல் செய்ய வந்தீர்கள்.
நான் பிரபாகரனைப் பார்த்து அரசியல் செய்ய வந்தவன். எனக்கு இன்னும் கூடுதல் திமிர் இருக்கும். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது என்ன சொல்லியதோ, அதைத்தான் நாங்கள் இப்போது செய்ய சொல்கிறோம்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை பெற்ற முஸ்லிம் சிறைக் கைதிகள் குறித்து ஸ்டாலினே பேசியுள்ளார்.
அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய எனக்கு வாக்குத் தாருங்கள் என்று கூறியுள்ளார். இஸ்லாமியர்கள் வாக்கும் அளித்துள்ளனர். விடுதலை செய்து தாருங்கள் என்று நாங்கள் கேட்கிறோம்' என்று கூறினார்.