ஓமிக்ரான் பரவல் எதிரொலி: சர்வதேச விமான சேவைகளுக்கான தடை நீட்டிப்பு
ஒமிக்ரான் பரவல் எதிரொலியால் சர்வதேச விமான சேவைகளுக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
ஓமிக்ரான் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நவம்பர் 25ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் B1.1 529 எனும் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது.
ஓமிக்ரான் தொற்று இதுவரை 40 நாடுகளுக்குப் பரவி உள்ளதாகவும், மற்ற நாடுகளைப் பாதிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு நாடுகளும் விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்நிலையில் ஓமிக்ரான் பரவுவதை தீவிரமாக தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் விமான சேவையில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தியதால் இந்தியாவில் சர்வதேச விமானங்கள் சேவை மார்ச் 23ம் தேதி 2020ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் மீண்டும் விமான சேவையை தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதை அடுத்து
இந்தியாவில் டிசம்பர் 15ம் தேதி முதல் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அதிகாரப் பூர்வ தகவலை தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது உருமாறிய கொரோனாவா ஓமிக்ரான் மீண்டும் அச்சுறுத்த தொடங்கியதால், வழக்கமான சர்வதேச விமான சேவைக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அதிகாரப் பூர்வ தகவலை தெரிவித்துள்ளது.