பாஜகவுடன் கூட்டணியை முறிக்க என்.ஆர் காங்கிரஸ் முடிவு.. காரணம் என்ன?
புதுச்சேரியில் பாஜக - அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள என்.ஆர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் பெரும்பான்மை இழந்ததால் கடந்த மாதம் முதல்வர் நாராயணசாமி பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பலரும் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். அமைச்சர் நமச்சிவாயமும் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் காங்கிரஸ் - திமுக கூட்டணியே தொடர்ந்து தேர்தலைச் சந்திகக் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. அதே சமயம் பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர் காங்கிரஸ் தலைமையில் அதிமுக மற்றும் பாஜக தேர்தலைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது என்.ஆர் காங்கிரஸ் விலக முடிவெடுத்துள்ளது. என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர்களை பாஜக தன் பக்கம் இழுப்பதும் ரங்கசாமிக்கு பதிலாக நமச்சிவாயத்தை முதல்வர் வேட்பாளராகவே முன்னிறுத்துவதுமே இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.
சமீபத்தில் புதுச்சேரிக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக தலைமையில் ஆட்சி அமையும் எனப் பேசியதும் இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.