நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படுமா - பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை என்ன?
தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் வருகிற நவம்பர் 1 ஆம் தேதி திறக்க அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து அந்த முடிவினை பள்ளிக் கல்வித்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்னரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பலர் வீட்டில் இருந்தே பணிபுரிந்தனர். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது.
அதன் பின் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததை அடுத்து பள்ளிகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதன் படி முதற்கட்டமாக உயர்நிலை வகுப்புகளான 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும் பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை பின்பற்றி வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மற்ற வகுப்பு மாணவர்கள் பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். எனவே பள்ளிகள் திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதன் படி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்க அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தில் செயலாளர் ஆர். ரமேஷ் அரசிடம் கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் பருவமழை தொடங்கி விட்டது.
மேலும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பண்டிகை காலம் என்பதால் புதிய உடை & பொருட்கள் வாங்கவும் மக்கள் அதிக நெரிசலுடன் கூட்டமாக கூடுகின்றனர்.
இந்த பருவமழை மற்றும் பண்டிகை காரணமாக கொரோனா தொற்று அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. அதனால் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்காமல் பண்டிகை காலம் முடித்த பின் பள்ளிகளை திறக்க வேண்டும். இது குறித்து அரசு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.