கொரோனா தடுப்பூசிக்காக நாடு கடத்தப்படும் பிரபல டென்னிஸ் வீரர்? - அதிர்ச்சியில் ரசிகர்கள்

novakdjokovic ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் நோவக் ஜோகோவிச்
By Petchi Avudaiappan Jan 07, 2022 04:33 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படுவார் என அந்நாட்டு துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக திகழ்ந்து வரும் செர்பியாவைச் சேர்ந்த 34 வயதாகும் நோவக் ஜோகோவிச் கிராண்ட் ஸ்லாம் போட்டித்தொடர்களுள் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஜனவரி 17 ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்த தொடருக்காக துபாய் வழியாக மெல்போர்ன் விமான நிலையத்துக்கு அவர் வந்தடைந்தார். 

இதனிடையே ஆஸ்திரேலிய ஓபனில் கலந்துகொள்ளும் வீரர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என போட்டி அமைப்பும், ஆஸ்திரேலிய அரசும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஜோகோவிச் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அதே நேரத்தில் இதற்காக ஆஸி ஓபன் போட்டி அமைப்பிடம் இருந்து சிறப்பு விலக்கு பெற்றுள்ளதாக ஜோகோவிச் தரப்பில் கூறப்படுகிறது.

மெல்போர்ன் வந்த பின்னர் ஜோகோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு அதிரடியாக ரத்து செய்து அவர் ஆஸ்திரேலியாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது மெல்போர்ன் விமான நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில்  ஜோகோவிச் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜோகோவிச் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியர்கள் அல்லாத வெளிநாட்டினர் தகுந்த விசா வைத்திருக்காவிட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் அல்லது நாடு கடத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 9 முறை ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றிருக்கும் ஜோகோவிச், ஆஸ்திரேலிய அரசின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.