பிரபல டென்னீஸ் வீரர் ஜோகோவிச்சின் விசா மீண்டும் ரத்து

visa tennis cancelled again novak djokovic
By Swetha Subash Jan 14, 2022 10:14 AM GMT
Report

பிரபல டென்னீஸ் வீரர் ஜோகோவிச்சின் விசாவை மீண்டும் ரத்து செய்வதாக ஆஸ்திரேலியா குடியுரிமை அமைச்சர் அலெக்ஸ் ஹாவே தெரிவித்துள்ளார்.

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக வலம் வருபவர் ஜோகோவிச். இவரது விவகாரம் தற்போது விளையாட்டு உலகில் பெரும் சர்ச்சையாக தொடர்ந்து வருகிறது.

ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க தடுப்பூசி செலுத்தாமல் சென்ற ஜோகோவிச்சின் விசா ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது முறையாக அவரது விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்துள்ளது.

போதுமான மருத்துவ ஆவணங்கள் இல்லையென்று கூறி அவரது விசாவை ரத்து செய்வதாக அந்த நாட்டு குடியுரிமை அமைச்சர் அலெக்ஸ் ஹாவே தகவல் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும், கள நடுவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், ஜோகோவிச் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. மருத்துவ காரணங்களுக்காகவே அவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்று விளக்கம் அளித்தார்.

ஆனாலும், அவரது விளக்கத்தை ஏற்காத ஆஸ்திரேலிய அரசு அவரது விசாவை ரத்து செய்து, அவர் தங்கிய ஓட்டலிலே சிறை வைத்தது. அந்த நாட்டு அரசின் முடிவை எதிர்த்து ஜோகோவிச் மெல்போர்ன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஜோகோவிச்சிற்கு ஆதரவாக செர்பியா மக்களும், ஜோகோவிச்சின் ரசிகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜோகோவிச் விசாவை ரத்து செய்த உத்தரவை ரத்து செய்த மெல்போர்ன் நீதிமன்றம், அவரை ஆஸ்திரேலிய தடுப்பு காவல்மைய ஓட்டலில் இருந்து விடுவிக்கவும் உத்தரவிட்டது.

ஜோகோவிச் ஆஸ்திரேலியா ஓபனில் மீண்டும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது விசாவை மீண்டும் ரத்து செய்திருப்பதால் அவர் இந்த தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.