Friday, Jul 4, 2025

மக்களவையில் சக எம்.பி.யை `தீவிரவாதி' எனக் கூறிய பாஜக எம்.பி.க்கு நோட்டீஸ்!

BJP India
By Jiyath 2 years ago
Report

மக்களவையில் சக எம்.பி.யை `தீவிரவாதி' எனக் கூறிய பாஜக எம்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அநாகரிக பேச்சு

கடந்த 18ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நேற்று முன்தினம் சந்திரயான் 3 வெற்றி குறித்து விவாதம் நடைபெற்றது.

மக்களவையில் சக எம்.பி.யை `தீவிரவாதி

அப்போது குறுக்கிட்ட பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலியை தீவிரவாதி என்றும் தகாத வார்த்தைகளாலும் தெற்கு டெல்லி பாஜக எம்.பி ரமேஷ் பிதூரி விமர்சித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரத்திற்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் அவையில் வருத்தம் தெரிவித்தார்.

மேலும், அந்த வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு அவைத் தலைவருக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் ஏற்கெனவே அந்த வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டதாக அவையை நடத்திய காங்கிரஸ் எம்.பி. கே.சுரேஷ் தெரிவித்தார். இருந்தாலும் ரமேஷ் பிதூரியை அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தினார்.

ரமேஷ் பிதூரிக்கு நோட்டீஸ்

மேலும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா "இந்த விவகாரத்தில் ரமேஷ் பிதூரிக்கு எதிராக சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? என்று கேள்வி எழுப்பினார்.

மக்களவையில் சக எம்.பி.யை `தீவிரவாதி

இதற்கு "இனிமேல் இதுபோல் நடந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என சபாநாயகர் ஓம் பிர்லா, ரமேஷ் பிதூரிக்கு எச்சரிக்கை விடுத்தார். இதுகுறித்து பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலி கூறுகையில் “எனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். சபாநாயகர் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இல்லையென்றால் அவைக்கு வராமல் இருப்பது குறித்து யோசித்து வருகிறேன்.

ஏனென்றால் இது போன்ற செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாது” என்றார். இந்நிலையில் மக்களவையில் பேசியது தொடர்பாக ரமேஷ் பிதூரிக்கு பாஜக நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவின் அறிவுரைப்படி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.