எனக்கு கிரிக்கெட் முக்கியம் கிடையாது...என் நாடு தான் முக்கியம் : பிரபல வீரர் பரபரப்பு பேச்சு
ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் தெரிவித்த கருத்து ஒன்று அவரது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சர்வதேச அளவில் உள்ள மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்களையும் தனது பந்துவீச்சால் பயமுறுத்தக்கூடிய ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்காக தனது முதல் போட்டியில் விளையாடி வருகிறார்.
23 வயதாகும் அவர் உலகெங்கும் நடக்கும் பல்வேறு விதமான தொடர்களிலும் பங்கேற்று விளையாடி வருவதோடு, ஐபிஎல் தொடரிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். நடப்பாண்டு சீசனில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி வரும் அவர், தன்னுடைய கருத்துக்களை மிகவும் வெளிப்படையாக பேசும் வழக்கம் கொண்டவர்.
அந்த வகையில் எனக்கு எப்பொழுதும் என்னுடைய நாடு தான் முக்கியம். நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஒருபோதும் நாட்டை மறக்கக்கூடாது என ரஷீத் கான் கூறியுள்ளார். ஒருவேளை நாட்டிற்காக விளையாட வேண்டுமா அல்லது கிளப்பிற்காக விளையாட வேண்டுமா என்ற நிலைமை வந்தால் நான் எந்தவொரு குழப்பமும் இல்லாமல் நாட்டை தான் தேர்ந்தெடுப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் ஆப்கானிஸ்தான் அணிக்காக மட்டும் விளையாடாமல் இருந்திருந்தால் என்னை ஒருவருக்குமே தெரிந்திருக்காது. எனவே நாட்டிற்காக நாம் தேவைப்படும் போது வேறு எதைப் பற்றியும் நினைக்க கூடாது எனவும் ரஷீத் கான் கூறியுள்ளார்.