சென்னை அணியில் இனி ஜடேஜா இல்லையா? - அதிர்ச்சியளிக்கும் தகவல்
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் ஜடேஜா குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தாண்டு மீண்டும் மோசமான முறையில் வெளியேறியுள்ளது. அந்த அணி 10 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் ப்ளே ஆஃப் செல்வது கடினம் என்பதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இந்த சீசன் தொடங்குவதற்கு சென்னை அணியின் கேப்டன் பொறுப்பு ஜடேஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவரது தலைமையிலான அணி தொடர் தோல்வியில் சிக்கி தவித்து வெளியேறும் நிலையில் இருந்த போது மீண்டும் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் நிலைமை கையைவிட்டு சென்ற பின்னர் தோனியால் கூட சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறுவதை தடுக்க முடியவில்லை.
சென்னை அணியின் இந்த மோசமான நிலைக்கு ஜடேஜாவின் சொதப்பல் ஆட்டமே மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. காரணம் கடந்த சீசனில் சென்னை அணியின் நம்பிக்கையாக அவர் இருந்துள்ளார். ஆல்ரவுண்டரான ஜடேஜா பேட்டிங், பவுலிங்,ஃபீல்டிங், கேப்டன்சி என அனைத்திலும் சொதப்பி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
இந்நிலையில் ஜடேஜாவின் ஃபார்ம் குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் 5, 6 ஆம் வரிசைகளில் பேட்டிங் ஆடுவது சுலபமல்ல. அங்கு செட்டில் ஆக நேரம் இருக்காது. பல போட்டிகளில் வெற்றிக்கு அருகில் வந்து தோற்றோம். தற்போதைய நிலையில் அணியின் பேட்டிங் ஆர்டரில் கவனம் செலுத்திவருகிறோம். ஆகவே ஜடேஜாவின் ஃபார்மை பற்றி நான் கவலைப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.