மக்களே இனி மாஸ்க் அணிய தேவையில்லை - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

covid19 TNGovernment covidguidelines
By Petchi Avudaiappan Apr 03, 2022 09:33 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

கொரோனா நோய்த்தொற்று தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை இனி பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது, 

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் முதல் மற்றும் இரண்டாம் அலையாக உலக நாடுகள் பலவற்றிலும் பரவி பல்வேறு மனித இழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தியது. 

இன்றளவும் அதன் தாக்கம் ஆங்காங்கே காணப்படும் நிலையில் இது நம்மில் பரவாமல் தடுக்க  முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி , சானிடைசர் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசும் மாநில அரசுகளும் வலியுறுத்தியது. இதனிடையே இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை சரிவை சந்தித்து வருவதால் மார்ச் மாத இறுதியில் கொரோனா நெறிமுறைகளும் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி கொரோனா தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அவசியமில்லை எனவும், தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகியவை சுய விருப்பத்தின் அடிப்படையில் பின்பற்றலாம் என தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் சுகாதாரதுறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா காலத்தில் பொது சுகாதார சட்டத்தின்படி தமிழக அரசு விதித்திருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள மக்களில் 92% பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 75% பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டிருப்பதாகவும், மேலும் தடுப்பு ஊசி செலுத்தாதவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.