500 கி.மீ. தூரம் சென்று தாக்கும் ஏவுகணை - வெற்றிகரமாக சோதித்த வடகொரியா
2022 ஆம் ஆண்டில் முதல் ஏவுகணை சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
இரும்புத் திரை நாடுகளில் ஒன்றாக கருதப்படும் வடகொரியாவில் கிம் ஜோங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்த நிலையில் உணவு உற்பத்தி மற்றும் பொருளாதார மேம்பாட்டில் அரசு அதிக கவனம் செலுத்தும் என்று அதிபர் கிம் ஜோங் உன் புத்தாண்டு உரையில் தெரிவித்தார்.
உணவு பிரச்னை, பொருளாதார பாதிப்புகள் ஒருபக்கம் இருந்தாலும் வடகொரியா தனது ராணுவ வலிமையை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் புத்தாண்டில் முதன்முறையாக 500 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக சோதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் அண்டை நாடான தென்கொரியாவின் பாதுகாப்பு உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். மேலும் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை சோதித்து வருவது என்பது வருத்தம் அளிப்பதாக ஜப்பான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.தொடர்ந்து ஆயுதங்களை பரிசோதனை செய்து வருவதால் சர்வதேச நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.