வெளுத்து வாங்க தொடங்கிய கனமழை - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து, அதை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஏற்படவிருக்கும் பாதிப்புகளை தடுக்கும் வகையிலான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்துள்ளது.
அக்டோபர் இறுதி வாரம் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.
அதனையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .
அந்த ஆலோசனை கூட்டத்தில், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறையினரும் இணைந்து பருவமழை பாதிப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பருவமழை காலங்களில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும்போது, முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், அமைச்சர்களும், துறை சார்ந்த செயலாளர்களும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நீர்நிலைகளை சீரமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அனைத்து துறை சார்ந்த செயலாளர்கள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
ஏற்கெனவே கடந்த வாரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கமால் இருக்கும் வகையில் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்கள் தூர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீர்நிலைகள், கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள், கரைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.