சென்னை வந்து தேர்வில் காப்பியடித்த வடமாநில மாணவர்கள் 28 பேர் கைது
சென்னையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சக பணிகளுக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட வெளி மாநில மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாணவர்கள் கைது
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவ பப்ளிக் பள்ளியில் பாதுகாப்பு துறையின் சி பிரிவு பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது. மொத்தம் இத்தேர்வில் 1728 பேர் எழுதினர்.
தேர்வில் ஹரியானா மாநிலம் சத் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 28 இளைஞர்கள் சிறிய அளவிளான ப்ளூடூத் கருவிகளை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் ஒரு மாணவருக்கு பதில் வேறொருவர் தேர்வு எழுதியதையும் அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதனை அடுத்து மோசடியில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவரையும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ப்ளூடூத் கருவிகளை பயன்படுத்தி தேர்வு எழுதியதற்கு யாரெல்லாம் உடந்தையாக இருந்தனர் மற்றும் தேர்வுநடத்தும் அதிகாரிகளுக்கு இதில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.