Netflix வெப்சீரிஸ் தொடரை விற்றவருக்கு மரண தண்டனை - வடகொரியாவில் பயங்கரம்
வடகொரியாவில் வெப் சீரிஸ் பார்த்த குற்றத்திற்காக மாணவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், மேலும் பல மாணவர்களுக்கு கடுமையான சிறை தண்டனையும், ஒருவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடும் தண்டனைகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பெயர் போன நாடான வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி பலமுறை அணு ஆயுத சோதனைகளை நடத்தி உலக நாடுகளின் கண்களில் விரல் விட்டு ஆட்டிவருகிறார்.
தற்போதைய சூழலில் உலக நாடுகளில் இருந்து வடகொரியா தனித்தீவாகவே இருந்து வருகிறது. மேலும் சமீபகாலமாக அங்கு உணவு தட்டுப்பாடும் அதிகளவில் நிகழத் தொடங்கியுள்ளது. அதேசமயம் கடும் சட்டங்கள் அமலில் இருந்து வருகின்றன. சினிமா, பொழுதுபோக்கு உள்ளிட்ட கேளிக்கைகள் என்பது அங்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது.
இதனிடையே புகழ்பெற்ற நெட்ஃபிளிக்ஸ் வெப் சீரிஸான ‘ஸ்குவிட் கேம்’ தொடரை சட்டவிரோதமாக பென் ட்ரைவில் வட கொரியாவுக்குள் கடத்தி வந்து அதை பென் ட்ரைவ் மூலம் விற்பனை செய்தவருக்கு தூக்கு தண்டனையும், அந்த வெப் தொடரை பார்த்த பள்ளி மாணவர்களுக்கு ஆயுள் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளையும் அந்நாட்டு அரசு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனா சென்று திரும்பிய வடகொரியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஸ்குவிட் கேம் தொடரின் பிரதியை பென் ட்ரைவ் மூலம் தனது நாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறார். மேலும் அத்தொடரை அவர் பென் ட்ரைவ்களில் பிரதியெடுத்து ரகசியமாக விற்பனை செய்தும் வந்திருக்கிறார். இவரிடம் ஸ்குவிட் கேம் தொடர் இருந்த பென் ட்ரைவை வாங்கிய பள்ளி மாணவர் ஒருவர், பள்ளியில் தனது நெருங்கிய நண்பருடன் சேர்ந்து அத்தொடரை பார்த்திருக்கிறார்.
அந்த நண்பர் இந்த சீரிஸ் குறித்து ஆகா ஓகோ என புகழ்ந்து பேசியதால் பிறரும் அத்தொடரை பார்க்க வேண்டும் என தங்களின் ஆவலை வெளிப்படுத்தியதால் அந்த பென் ட்ரைவை சில மாணவர்களுடன் அந்த மாணவர் பகிர்ந்திருக்கிறார். மாணவர்கள் இப்படி ரகசியமாக வெப் தொடர் பார்த்தது ரகசிய ஏஜெண்டுகள் மூலம் அரசின் கவனத்துக்கு சென்றது.
இது குறித்து வடகொரிய அரசு விசாரணை நடத்தியது. வடகொரியாவை பொறுத்தமட்டில் புதிய சட்டம் ஒன்றை அமலுக்கு கொண்டுவந்திருக்கிறது. அதன்படி அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீடியோக்களை தொடர்களை வட கொரியாவுக்குள் கொண்டுவருவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறி கொண்டுவருபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க இயலும்.
அதன்படி வட கொரியாவுக்குள் தடை செய்யப்பட்ட வெப் தொடரை கொண்டு வந்த நபருக்கு மரண தண்டனையும், அந்த நபரிடம் இருந்து வெப் தொடர் அடங்கிய பென் ட்ரைவை வாங்கிய பள்ளி மாணவருக்கு ஆயுள் தண்டனையும். சம்பந்தப்பட்ட மாணவரின் பென் ட்ரைவை வாங்கி வீடியோ சீரிஸ் பார்த்த 6 மாணவர்களுக்கு தலா 5 ஆண்டுகள் கடும் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை துப்பாக்கிச்சூடு மூலம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பள்ளியின் தலைமையாசிரியர், வகுப்பாசிரியர் உள்ளிட்டவர்கள் பணி நீக்கம் செய்து வட கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது.