கொரோனாவை விரட்ட இஞ்சி டீ குடியுங்கள் : வட கொரிய அதிபர் உத்தரவால் மக்கள் அவதி
வடகொரியாவில் கொரோனா தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. நாட்டில் யாரும் தடுப்பூசி போடாததாலும், மருந்து தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்படுவதாலும் அங்குள்ள மக்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது.
தவறான நிர்வாகத்தின் காரணமாக, நோயாளிகள் சிகிச்சைக்காக வீட்டு வைத்தியத்தை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். மூலிகை தேநீர் குடிக்கவும், உப்பு நீரில் வாய் கொப்பளிக்கவும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
2020 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல், வடகொரியா கொரோனா பரவல் நாட்டிற்குள் வராமல் பாதுகாக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தற்போது கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைந்துவிட்டது. அதுவும் லட்சக்கணக்கானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், வெளி நாடுகளில் இருந்து வரும் தடுப்பூசி மற்றும் மருத்துவ உதவிகளை நிராகரித்துள்ளார். சில ஊடக தகவல்களின்படி, வட கொரியாவின் அரசு 'காய்ச்சலுக்கு' சிகிச்சையளிப்பதற்கு பாரம்பரிய மருந்துகளை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தீவிர நோய் இல்லாதவர்கள் இஞ்சி அல்லது ஹனிசக்கிள் டீயை அருந்தலாம் என ஆளும் கட்சிப் பத்திரிகையான ரோடாங் சின்முன் அறிவுறுத்தியுள்ளது. வடகொரியாவில் கொரோனா பாதிப்பு 1 மில்லியனைத் தாண்டியுள்ளது குறிப்பிடதக்கது.
இந்நிலையிலும் நாட்டின் அதிபர் வெளிநாடுகளின் உதவியை ஏற்காமல் காலம் தாழ்த்துவது மிகப்பெரிய மூடத்தனம் என உலக தலைவர்கள் தங்கள் கருத்துகளை பகிரங்கமாக கூறி வருகின்றனர்.