ஊரடங்கு அச்சம்: சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்
ரயிலில் புட்போர்ட் அடித்த வடமாநில தொழிலாளர்கள் பிகார் மாநிலத்துக்கு பயணம். இன்று முதல் பின்னலாடை நிறுவனங்கள் இயங்காது என்பதால் சொந்த ஊருக்கு செல்ல தீவிரம்.
கொரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரமாக உள்ளதால் தமிழக அரசு இரண்டு வார முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. அதில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்த போதூம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வு மற்றும் ஆக்சிஜன் படுக்கை கட்டுப்பட்டு காரணமாக பின்னலாடை நிறுவனங்கள் தாமாக முன்வந்து இன்று முதல் நிறுவனங்களை இயக்கப் போவதில்லை என அறிவித்துவிட்டன.
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமோ என்ற அச்சம் காரணமாக இத்தனை நாட்கள் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி உள்ளனர்.
ஏராளமானோர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யவும் சொந்த ஊருக்கு செல்ல திரண்டதால் திருப்பூர் ரயில் நிலையம் கூட்ட நெரிசலில் சிக்கியது. மாலை எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலம் பாரவுனி செல்லும் சிறப்பு விரைவு ரயிலில் கொரோனா சமூக இடைவெளியை மறந்து முண்டியடித்தபடி ரயிலில் ஏறத்துவங்கினர்.
ரயில் புறப்பட்ட நிலையிலும் பலர் தொடர்ந்து ஏறியபடி இருந்ததால் இளைஞர்கள் சிலர் ரயிலில் புட்போர்ட் அடித்த படி தங்கள் பயணத்தை துவக்கினர்.
ஊரடங்கு காலத்தில் சொந்த ஊருக்கு சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் தவிக்கும் மக்களுக்கு போதிய ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அதேபோன்று டிக்கெட் முன்பதிவு மையத்தில் அதிக அளவிலான வட மாநிலத் தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்தனர்.