மதுரை அருகே வழிப்பறியில் வடமாநில தொழிலாளி கொலை - என்ன நடந்தது ..?
மதுரை தோப்பூர் அருகே வடமாநில தொழிலாளி ஒருவர் வழிப்பறியின் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
பின்னணி என்ன..?
மதுரை திருமங்கலம் நெஞ்சக மருத்துவமனை அருகே புதிய கட்டடம் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணியில் 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதில் வேலை செய்து வரும் பீகாரை சேர்ந்த சுனில் (வயது 21) மற்றும் சுபாஷ் குமார் (வயது 21) இருவரும் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று மளிகை பொருட்களை வாங்கி தங்கள் வசிக்கும் இடத்திற்கு திரும்பி வந்துள்ளனர்.
கால்நடையாக இருவரும் தோப்பூர் அரசு மருத்துவமனை அருகே வந்துகொண்டிருந்த போது, சட்டென பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள் இருவரிடமும் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் ஆகியவற்றை கேட்டுள்ளனர்.
அதற்கு இருவரும் மறுக்கவே, வழிப்பறி செய்ய வந்த நபர்கள் கத்தியால் தாக்கியதில் இருவரும் பலத்த காயம் அடைந்துள்ளனர்.அதன் காரணமாக அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வர, வழிப்பறி செய்ய வந்த நபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.
கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த சுபாஷ் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த சுனில், சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.