தமிழகத்தில் 4,512 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது - தேர்தல் ஆணையர் தகவல்

tamilnadu vote nomination commissioner
By Jon Mar 24, 2021 03:26 PM GMT
Report

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னையில் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “இதுவரையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் 83.99 கோடி ரூபாய், 1.79 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள், 1.3 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், 14.8 கோடி ரூபாய் மதிப்புள்ள இதர பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மொத்தமாக 231.63 கோடி ரூபாய் மதிப்பிலான பணங்கள், நகைகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் 6.29 கோடி பேர் வாக்களிக்கத் தகுதியானவர்கள்.

தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக 1,971 புகார்கள் வந்திருக்கிறது. அதில் 1,368 புகார்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள புகார்கள் உண்மை கிடையாது. இதுவரையில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு 14,071 மனுக்கள் வந்த நிலையில் 6,598 பிரச்சாரங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்தல் ஆணையத்தால் தடுப்புக் காவலில் 8,158 கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

காவல்துறை மூலமாக 515 சோதனைச் சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டிருக்கின்றன. 18,712 உரிமம் வாங்கிய துப்பாக்கிகள் மீண்டும் காவல்துறையால் வாங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 80 வயதைக் கடந்தவர்கள் 12.87 லட்சம் பேர் இருக்கிறார்கள். அதில், 80 வயதைக் கடந்தவர்களில் 1,49,567 அஞ்சல் வாக்குகளுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்.

கொரோனா பாதித்து ஒருவர் கூட அஞ்சல் வாக்குகளுக்கு விண்ணப்பிக்க கிடையாது. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக கரூர், கோயம்புத்தூர், சென்னையில் அதிகமான புகார்கள் வந்திருக்கின்றன” என்றார்.