டாடா அறக்கட்டளையின் புதிய தலைவரான நோயல் டாடா - முழு பின்னணி என்ன?
டாடா அறக்கட்டளையின் புதிய தலைவரான நோயல் டாடா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரத்தன் டாடா
பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா(86) நேற்று முன் தினம் (09.10.2024) மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
மகாராஷ்டிராவில் நேற்று அரசு மரியாதையுடன் ரத்தன் டாடாவின் உடல் தகனம் செயப்பட்டது. ரத்தன் டாடாவிற்கு பின் பல லட்சம் கோடி மதிப்பு கொண்ட டாடா குழுமங்களின் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
புதிய தலைவர்
இந்நிலையில் இன்று புதிய தலைவரை தேர்வு செய்ய மும்பையில் டாடா போர்டு மீட்டிங் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 13 உறுப்பினர்களும் ஒருமனதாக நோயல் டாடாவை(Noel Tata) டாடா அறக்கட்டளைகளின் தலைவராக தேர்வு செய்தனர்.
இதன் மூலம் இன்று முதல் டாடா குழுமத்தில் இருக்கும் பல்வேறு அறக்கட்டளை அமைப்புகளின் தலைவராக நோயல் டாடா இருப்பார். இதில் முக்கியமாகச் சார் டோராபிஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் இரண்டின் டிரஸ்டியாக ஏற்கனவே நோயல் டாடா பணியாற்றியுள்ளார்.
இந்த 2 அறக்கட்டளை மட்டும் டாடா சன்ஸ் குழுமத்தின் 66% பங்குகளை வைத்துள்ளது. விமான போக்குவரத்து முதல் ஆட்டோமொபைல்கள் வரையிலான பல்வேறு தொழில்கள் டாடா சன்ஸ் குழுமத்தின் கீழ் வருகிறது.
நோயல் டாடா
நோயல் டாடா ரத்தன் டாடாவின் சித்தி மகன் ஆவார். மறைந்த ரத்தன் டாடாவின் தந்தை நாவல் டாடா முதல் மனைவி சூனி கமிசாரியட்டுடன் ஏற்பட்ட விவாகரத்துக்கு பின் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தொழிலதிபரான சிமோன் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு பிறந்த மகன்தான் நோயல் டாடா.
1999 ஆம் ஆண்டு டாடா குழுமத்தில் இணைந்த நோயல் டாடா டிரெண்ட் நிறுவனத்தில் மேனஜிங் டைரக்டராக பணியை தொடங்கினார். அதன் பின் வெஸ்ட் சைடு, டைடன், வோல்டஸ், டாடா இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களை நிர்வகித்து வந்தார்.
2011-ம் ஆண்டு 'தனக்கு பிறகு சைரஸ் மிஸ்ரா என்று ரத்தன் டாடா அறிவித்தார். ஆனால், 2016-ம் ஆண்டில் சைரஸ் மிஸ்ரா டாடா சன்ஸின் தலைவராக நீக்கப்பட்டு, மீண்டும் ரத்தன் டாடாவே தலைவரானார். அதன் பின் 2022 ஆம் ஆண்டு டாடா சன்ஸ் தலைவர், டாடா அறக்கட்டளைகள் தலைவர் என இரு பதவியாக பிரிக்கப்பட்டது.
நோயல் டாடா குடும்பம்
அதன் பின் தமிழ்நாட்டை சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் டாடா சன்ஸின் தலைவராக நியமிக்கப்பட்டார். ரத்தன் டாடா அறக்கட்டளையில் மட்டும் தலைவராக தொடர்ந்தார். தற்போது டாடா சன்ஸின் தலைவராக நடராஜன் சந்திரசேகரனே தொடரும் நிலையில் நோயல் டாடா, டாடா அறக்கட்டளைகளின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
67 வயதான நோயல் டாடா பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவனத்தில் மிகப்பெரிய பங்குதாரராக உள்ள பல்லோன்ஜி மிஸ்திரியின் மகளான ஆலு மிஸ்திரியை திருமணம் செய்துள்ளார். இவர்களது மூத்த மகளான லியா டாடா, டாடா குழுமத்தின் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனியின் துணைத்தலைவராக உள்ளார்.
மற்றொரு மகளான மாயா டாடா, டாடா கேபிட்டலில் தனது வாழ்க்கையைத் தொடங்கி, படிப்படியாக நிறுவனத்திற்குள் முன்னேறி வருகிறார். மகன் நெவில் டாடா ட்ரெண்ட் நிறுவனத்தில் தனது கேரியரை தொடங்கியுள்ளார்.