மாணவிகளின் குளியலரை வீடியோ எதுவும் பகிரப்படவில்லை - சண்டிகர் பல்கலை கழகம்
சண்டிகர் பல்கலை கழகத்தில் மாணவிகளின் குளியலரை வீடியோவை சக மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருக்கு பகிர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என பல்கலை கழக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் பரபரப்பு
பஞ்சாப் மாநிலத்தில் சண்டிகர் பல்கலை கழகத்தில் மாணவி ஒருவர் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமராவை பொருத்தி மாணவிகள் 60 பேரின் வீடியோ காட்சிகளை ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தனது ஆண் நண்பருக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
மாணவிகள் அந்தரங்க வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியானதாக கூறி நேற்று இரவு மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியானதால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. இதற்கு அம்மாநில காவல்துறை மறுப்பு தெரிவித்திருந்தது.
போராட்டத்தின் போது மாணவி ஒருவர் சுருண்டு விழுந்து மயக்கமடைந்தார் அவரை மீட்ட சக மாணவிகள் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பல்கலைக்கழகம் விளக்கம்
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்ட மாணவி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரூபிந்தர் கவுர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விடுதியில் மாணவிகள் குளிப்பதை சக மாணவியே வீடியோ எடுத்து தனது ஆண் நண்பருக்கு அனுப்பியதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும் ஒரு பெண் தனது காதலனுடன் பகிர்ந்து கொண்ட தனிப்பட்ட வீடியோவைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை என சண்டிகர் பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.