ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை - ஐஏஎஸ் அதிகாரி தகவல்

Tamil nadu Death Odisha Odisha Train Accident
By Thahir Jun 03, 2023 01:05 PM GMT
Report

இதுவரை கிடைத்த தகவலின்படி, தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என்று ஒடிசா சென்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி குமார் தெரிவித்துள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து 

ஒடிசாவில் பால்சோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288-ஆக அதிகரித்துள்ளது. 747 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 56 பேர் படுகாயமடைந்து,கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருந்தது. அதுமட்டுமில்லாமல், விபத்து நடந்த ரயிலில் தமிழ்நாட்டை சேர்ந்த 190 பேர் பயணம் செய்ததாகவும் கூறப்பட்டது.

No Tamils ​​died in the Odisha train accident

இதனிடையே, ஒடிசா ரயில் விபத்தை அடுத்து, தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளுக்கு உதவுவதற்காக அரசு சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழு இன்று காலை ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை

பால்சோர் மாவட்டம் பாகநாகாவில் ரயில் விபத்து நடந்த இடத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு ஒடிசா சென்று நிலைமை குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், இதுவரை கிடைத்த தகவலின்படி, தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை என்று ஒடிசா சென்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி குமார் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசா தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்தபின் ஐ.ஏ.எஸ் அதிகாரி குமார் ஜெயந்த் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், பயணிகள் பட்டியலை வைத்து தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரேனும் விபத்தில் சிக்கியுள்ளாரா என தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பயணிகளின் முழுமையான எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை. பயணிகள் பட்டியலை கொண்டு விவரங்களை சேகரித்து வருகிறோம். ரயில் விபத்து தொடர்பாக 2 குழுவாக பிரிந்து ஆய்வை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை தமிழ்நாடு அரசின் குழு சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.