இந்தியா பக்கம் திரும்பும் பிரதமர் இம்ரான் கான் - என்ன சொன்னார் தெரியுமா?

india pakistan imrankhan pmmodi
By Petchi Avudaiappan Apr 08, 2022 10:50 PM GMT
Report

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் இம்ரான் கான் எந்த வல்லரசு நாடாலும் இந்தியாவில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் பிரதமர் இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதனால் இம்ரான் கானுக்கு கொடுத்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் வாங்கிக் கொண்டது.

ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று பாராளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்தார். மேலும் இடைக்கால பிரதமராக இம்ரான் கான் செயல்படுவார் என்றும், அங்கு 90 நாட்களில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் பாகிஸ்தானில் நடைபெறும் அரசியல் குழப்பத்தால் அங்கு எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தனர். இதில்  இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்தது செல்லாது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதியான இன்று மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர் வெற்றிபெறுவதற்கான சாத்தியம் குறைவாகவே பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை மக்களிடம் உரையாற்றிய இம்ரான் கான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் வருத்தம் அடைந்து இருக்கிறேன். துணை சபாநாயகர் வெளிநாட்டு சதி தொடர்பாக விசாரித்த நிலையில் உச்சநீதிமன்றமும் விசாரணை நடத்தி இருக்க வேண்டும் என தெரிவித்தார். 

மேலும் ஊடகங்களுக்கு வெட்கமே இல்லை. அரசு கவிழ்வதை கொண்டாடுகிறார்கள்.நம் நாட்டின் இறையாண்மை உங்கள் கையில் இருக்கிறது என்பதால் அதை நீங்கள் பாதுகாக்க வேண்டும் என கூறிய இம்ரான் கான் எந்த வல்லரசு நாடாலும் இந்தியாவில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது. எனவே பயன்படுத்திவிட்டு தூக்கி வீசுவதற்கு நாம் ஒன்றும் டிஸ்யூ பேப்பர் இல்லை.வெளியே வாருங்கள். போராடுங்கள்  என தெரிவித்துள்ளார்.