பொதுமக்களுக்கு பெட்ரோல், மதுபானம் எதுவும் கொடுக்கக் கூடாது- கரூர் மாவட்டத்தில் அதிரடி உத்தரவு
கரூர் மாவட்டத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே டாஸ்மாக்கில் மது, எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் வழங்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில் அனைத்து பகுதிகளிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பெட்ரோல்பங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய ஆட்சித்தலைவர் பிரபுசங்கர், கரூர் மாவட்டம் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி அதிக அளவில் உயிரழப்புகள் நடக்கும் மாவட்டமாக திகழ்வது வருத்தமளிப்பதாகவும், தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதன் அர்த்தத்தை அனைவரும் உணர வேண்டும் என்றும் கூறினார்.
இதனை மனதில் கொண்டு இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் கரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உணவகங்கள், ஜவுளி, நகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள், தொழிற்சாலைகள் என எந்த ஒரு இடத்திற்கும் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு சேவையும் வழங்கப்பட மாட்டாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதுபற்றி அனைத்து பகுதிகள், நிறுவனங்களின் முகப்புகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருசக்கர வாகனம் ஓட்டிவந்தால் பெட்ரோல் வழங்க கூடாது என்றும், 4 சக்கர வாகனங்களில் வருபவர்கள் சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தனியார் நிறுவனங்களில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வருவோரை பணியாற்ற அனுமதிக்க கூடாது.
தொடர்ந்து அனைத்து மதுபானக் கடைகளிலும் தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகனஓட்டிகளுக்கு மதுபானம் வழங்கக்கூடாது. நாம் ஒருங்கிணைந்து முன்னெடுக்கும் இந்த உயிர்க்காக்கும் இயக்கத்தால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டாலும் நமக்கு வெற்றியே என ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் கூறியுள்ளார்.