முகக்கவசம் அணியாமல் வந்தால் காய்கறி விற்பனை செய்யக்கூடாது... சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு
முகக்கவசம் அணியாமல் வரும் மக்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்யக்கூடாது என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அந்த தன்னார்வ நிறுவனம் மூலம் சென்னை மெரினா முதல் ஆவடி வரை சுமார் 32 கி.மீ வரை உணவுகள் வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை மாநகர் பகுதிகளில் மாநகராட்சி சார்பில் 1500க்கும் மேற்பட்ட வாகனங்களில் உள்ள பொதுமக்களுக்கு காய்கறி,பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் தேவைக்கேற்ப கூடுதல் வாகனத்தை இயக்கவும், பொதுமக்களும் வாகனத்தில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வகையில் காவல்துறை சார்பில் அவர்களுக்கு அனுமதி அளிக்க பரிந்துரை செய்ததாகவும் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.
அதேசமயம் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.