விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை போட்டது நாங்க இல்லை: அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
மத்திய அரசு எச்சரிக்கை கொடுத்ததால் தான் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன் கொள்கை விளக்க குறிப்பை வெளியிட்ட அமைச்சர் சேகர் பாபு, திமுக அரசு அமைந்த பிறகு 203 ஏக்கர் அளவிலான வேளாண் நிலங்களும் 170 கிரவுண்டு அளவிலான காலி நிலங்களும் மீட்கப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் கேள்வி நேரத்தின் போது பாஜக எம்.எல்.ஏ காந்தி, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு விதிக்கப்பட்ட தடையை அரசு நீக்கி ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு, வரும் முன் காப்போம் என்ற வகையில் முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுகிறார். ஒன்றிய (மத்திய) அரசின் உள்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்ததால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என விளக்கமளித்தார் சேகர் பாபு.