கசந்துவிட்டதா உறவு? - காங்கிரஸை மறைமுகமாக விமர்சிக்கும் பிரசாந்த் கிஷோர் நடந்தது என்ன?

congress problem prashantkishor
By Irumporai Oct 08, 2021 10:46 AM GMT
Report

காங்கிரஸ் கட்சியில் விரைவில் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் சேரப் போகிறார் என்று பேச்சு எழுந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு இல்லை என்று பிரசாந்த் கிஷோர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.

அதன்பின் 2015ஆம் ஆண்டு நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், ஜேடியு, ஆர்ஜேடி சேர்ந்த மகா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற வைத்தார்.

அந்தத் தேர்தல் முடிந்தபின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்து அந்தக் கட்சியின் துணைத் தலைவரானார்.

ஆனால், கட்சியின் தலைவரும், பிஹார் முதல்வருமான நிதிஷ் குமாருக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே உரசல் ஏற்பட்டதையடுத்து, அந்தக் கட்சியிலிருந்து கடந்த ஆண்டு பிரசாந்த் கிஷோர் விலகினார்.

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகத் தேர்தல் பணியில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர், தேர்தல் முடிந்தபின் தன்னுடைய நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து விலகிவிட்டார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் முறைப்படி பிரசாந்த் கிஷோர் சேரப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. அதற்கு ஏற்றவாறு ஜூலை மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியைச் சந்தித்துப் பேசி காங்கிரஸ் கட்சியோடு பிரசாந்த் கிஷோர் நெருக்கத்தை அதிகமாக்கினார்.

2022ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் கடந்த இரு ஆண்டுகளாக பிரியங்கா காந்தி சுற்றுப்பயணம் செய்து பணியாற்றி வருகிறார்.

இந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோரைக் கட்சியில் சேர்ப்பது நல்ல பலன் அளிக்கும் என்று கட்சிக்குள் ஒருதரப்பினர் தெரிவித்தனர்.

ஆனால், காங்கிரஸ் கட்சிக்காக எந்தத் தியாகமும் செய்யாமல் உழைக்காமல், எதிரணியிலிருந்து வரும் பிராசாந்த் கிஷோர் வருவதை சோனியா காந்திக்குக் கடிதம் மூலம் எதிர்ப்பு தெரிவித்த ஜி 23 மூத்த தலைவர்கள் பலர் விரும்பவில்லை.

இந்நிலையில் லக்கிம்பூர் கெரி விவாசாயிகள் கொலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, தீவிரம் போதவில்லை என்று பிரசாந்த் கிஷோர் அந்தக் கட்சியை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து பிரசாந்த் கிஷோர் ட்வி்ட்டரில் பதிவில்:

லக்கிம்பூர்கெரி விவகாரத்தை அடிப்படையாக வைத்து மிகப்பழமையான கட்சிக்கு உடனடியான, விரைவான புத்துயிர் கிடைக்கும் என எதிர்பார்த்த சிலருக்கு மிகப்பெரிய ஏமாற்றம் கிடைக்கும்.

பழமையான கட்சியில் ஆழமாக வேர்விட்ட பிரச்சினைகளுக்கும், கட்டமைப்பு பலவீனத்துக்கும் துரதிர்ஷ்டமாக விரைவான தீர்வு ஏதும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் காங்கிரஸ் தலைமைக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்பது அரசியல் வட்டரங்கள் தெரிவிக்கின்றன.