கோவிஷீல்டு தடுப்பூசி பிரச்சனை தமிழகத்தில் இல்லை - அமைச்சர் மா.சு!!
கோவிஷீல்டு தடுப்பூசிகளால் பாதிப்புகள் உண்டாகுவதை அந்நிறுவனம் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.
இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இந்நிகழ்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, கோவிஷீல்டு குறித்து வினவப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், எந்த விதமான தடுப்பூசியாக இருந்தாலும் அவரவர் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறனை பொறுத்து தான் பின் விளைவுகள் அமையும் என விளக்கமளித்தார்.
நீதிமன்றத்தில் தெரிவித்ததை போல, ரத்தம் உறைதல் மாதிரியான பிரச்சனைகள் இதுவரை வெளியில் தெரியவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், கோவிஷீல்டு போட்டுக் கொண்டவர்கள் பயத்துடனே வாழ வேண்டிய அவசியம் இல்லை என்றும், தமிழ்நாட்டில் இதுவரை எங்கும் கோவிஷீல்டு தொடர்பான பாதிப்புகள் பதிவாகவில்லை என்றும் விளக்கமளித்தார்.