தடையின்றி மின்சாரம் விநியோகம் - இபிஎஸ் குற்றச்சாட்டு - தங்கம் தென்னரசு பதில்

Government of Tamil Nadu DMK AIADMK Edappadi K. Palaniswami Thangam Thennarasu
By Karthick May 07, 2024 12:24 PM GMT
Report

தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதாக தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

எடப்பாடி குற்றசாட்டு

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில், தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்தடை இருப்பதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்தடை வந்துவிடும் என்பது விதியாக உள்ளது என சாடியிருந்தார்.

edappadi palanisamy angry

இந்த கருத்திற்கு இன்று மாநிலத்தின் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுகிறது. கடந்த ஆட்சி காலத்தில், தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் 12 மணி நேரமும், பிற பகுதிகளில் 4 மணி நேரமும் மட்டும்தான் மும்முனை மின்சாரம் என்று இருந்த நிலையினை மாற்றி, உழவர்களின் நலனை எப்பொழுதும் முதன்மையாக கருதக்கூடிய இந்த அரசு கடந்த 2021-ல் பதவியேற்றது முதல், நாள் ஒன்றிற்கு 12 முதல் 16 மணி நேரம் வரை தமிழ்நாடு முழுவதும் விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் பயனாக தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது.

தங்கம் தென்னரசு பதிலடி 

விவசாயிகளுக்கு தேவையான மும்முனை மின்சாரத்தின் நேரத்தினை நீட்டி வழங்கியதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு விவசாய பெருமக்களின் பெருங்கனவாக இருந்து வந்த விவசாய மின் இணைப்பு உடனடியாக வழங்கிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. அதன் பயனாக, கடந்த 2 ஆண்டுகளில், 1,50,000 விவசாய மின்இணைப்புகள் வழங்கப்பட்டு அளப்பரிய சாதனையை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நடப்பாண்டிற்கான, விவசாய மின்இணைப்புகள் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

powercut in tamil nadu

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் மின்சார பயன்பாடும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இரவு நேரங்களில் விவசாய மின்சார இணைப்புகளின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் இம்மாவட்டங்களில் ஒரு சில பகுதியில் உள்ள உயரழுத்த மின் கட்டமைப்புகளில் அவ்வப்போது சில இடையூறுகள் ஏற்படுகிறது.

இத்தகைய இடையூறுகளை முற்றிலுமாக நிவர்த்தி செய்து, டெல்டா மாவட்ட விவசாய மின் இணைப்புகளுக்கு இன்னும் அதிகப்படியான மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கிட தேவையான அனைத்து மேம்பாட்டு பணிகளும், போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் நிலவி வந்த குறைந்த மின் அழுத்தம் (Low Voltage) இடர்களைக் களையும் பொருட்டு, ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டம் ஜீலை 2021-ல் வகுக்கப்பட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 5,705 இடங்களில் உள்ள மின்மாற்றிகளில் மின்சுமை அதிகமாக உள்ளது எனவும் 3,200 இடங்களில் மின்மாற்றிகளில் குறைந்த மின்னழுத்தம் நிலவுவதாகவும் மொத்தம் 8,905 இடங்களில் கண்டறியப்பட்டது.

no powercut in tamil nadu

8,905 கூடுதல் மின்மாற்றிகள் நிறுவும் ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டப் பணிகள் தமிழக முதல்-அமைச்சரால் ஆகஸ்ட் 2021-ல் துவக்கி வைக்கப்பட்டது. வெவ்வேறு திறனுள்ள விநியோக மின்மாற்றிகள் நிறுவப்பட்டு, மின்பளுக்கள் பகிர்வு செய்யப்பட்டு ரூபாய் 743.86 கோடி மதிப்பீட்டில் மின்கட்டமைப்புகள் இயக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு விதியாக இருக்கு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு விதியாக இருக்கு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

இதன் மூலம் 652 எம்.வி.ஏ கூடுதல் மின்திறன் மின்கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. அதிக மின்சுமையுள்ள 5,705 மின்மாற்றிகளில் மின்பளுக்கள் பகுப்பு செய்யப்பட்டதன் மூலம் அப்பகுதியிலுள்ள அனைத்து மின்மாற்றிகளிலும் இணைக்கப்பட்டுள்ள மின்பளுக்கள் அவற்றின் அனுமதிக்கப்பட்ட திறன் வரம்புக்குள் கொண்டுவரப்பட்டு அனைவருக்கும் ஒரே சீராக தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

குறைந்த மின்னழுத்தத்தை சரி செய்வதற்கு கூடுதலாக 3,200 புதிய மின்மாற்றிகள் நிறுவியதன் மூலம் தாழ்வழுத்த மின்பாதையின் நீளம் குறைந்து மின்னிழப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. தற்பொழுது, கிராமப்புறங்கள் உட்பட கடைமுனை நுகர்கவார் வரை அனைத்து நுகர்வோர்களுக்கும் சீரான மின்னழுத்தத்தில் மின்விநியோகம் வழங்கப்படுகிறது.

thangam thennarasu slams eps for powercut

பொதுவாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு தேவையான மின்சாரத்தினை வழங்குவதற்கென 24 மணி நேரமும் மும்முனையில் இயங்கக்கூடிய பிரத்தியேகமான மின் பாதையின் வாயிலாக தடையில்லா சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, கடந்த மூன்று ஆண்டுகளாக, மின்சாரத்துறையில் மேற்கொண்டு வரும் சீரிய நடவடிக்கைகளின் பயனாக, தமிழ்நாட்டில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் மட்டுமல்லாமல் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மின்னகத்தில், பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறுவதற்காக, 3 முறைப்பணிகளில், ஒவ்வொரு முறைப்பணிக்கும் 2 மேற்பார்வையாளர்கள் உட்பட 65 பணியாளர்கள் கொண்டு 24 மணிநேரமும் இயங்கி வருகிறது."