“தமிழ்நாடு அனுமதி எதற்கு?” - மேகதாது விஷயத்தில் சீண்டும் கர்நாடகா முதல்வர்
மேகதாது அணை திட்டத்துக்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கிருஷ்ணா அரசு இல்லத்தில் மாநிலத்தின் நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கலந்துக்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
கர்நாடகத்தில் செயல்படுத்தப்படும் நீர்ப்பாசனத் திட்டங்களை உரிய காலக்கெடுவுக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றும், நீர்மேலாண்மையில் கவனம் செலுத்தி, அதிக நீரை பாசனத்துக்குக் கொண்டுவர அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
அப்போது மேகதாது அணை திட்டத்துக்கு தமிழக அரசின் அனுமதி தேவை என்று, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, ஆந்திர மாநிலம் தொடுத்த வழக்கு ஒன்றில் குடிநீர்த் திட்டங்களுக்கு கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உள்ளது.
மேகதாது அணை திட்டமும் குடிநீர்த் திட்டமாக இருப்பதால், அதை செயல்படுத்த தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக கூறியுள்ளார்.