இனி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் கிடையாது :சுகாதாரத்துறை தகவல்

corona tamilnadu vaccination team
By Irumporai Apr 09, 2022 09:54 AM GMT
Report

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வந்தது.

இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். ஆரம்பத்தில் ஒவ்வொரு முகாமிலும், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தற்போது வரை தமிழகத்தில் 27 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. மெகா தடுப்பூசி முகாமில் மட்டும் இதுவரை 4 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தற்போது இந்த முகாமில் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்களிடையே ஆர்வம் குறைந்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் இனி கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் கிடையாது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் கூறுகையில், சில மாவட்டங்களில் 100% தடுப்பூசி இலக்கு எட்டப்பட்டுள்ளதால், மெகா தடுப்பூசி முகாம்களுக்கு அவசியமில்லை.

தேவைக்கேற்ப மாவட்டங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும். மேலும் ஒரு வாரம் ஒருநாள் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 4 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.