மக்கள் கொரோனா விதிகளை பின்பற்றினால் முழு ஊரடங்கே தேவையில்லை - மத்திய இணை அமைச்சர்
மக்கள் கொரோனா தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றினால் முழு ஊரடங்குக்கான தேவையே இல்லை என மத்திய இணை அமைச்சர் சோபா கரண்ட்லஜே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "இப்போது நாம் கொரோனா வைரஸுடன் வாழ வேண்டிய காலக்கட்டம். கடந்த சில மாதங்களாகவே கொரோனாவுடன் தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.
ஊரடங்கு என்பது மக்களின் வாழ்வாதாரத்தை வெகுவாகப் பாதிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் மக்கள் அனைவரும் பொறுப்பை உணர்ந்து முகக்கவசம் அணிதல், கூட்டங்களைத் தவிர்த்தல்,
சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற பழக்கங்களைப் பின்பற்றினால் நிச்சயமாக கொரோனா ஊரடங்கு தேவைப்படாது" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 3,37,704 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 488 பேர் உயிரிழந்தனர். 2,42,676 பேர் தொற்றிலிருந்து குணமாகினர். நாடு முழுவதும் தற்போது 21,13,365 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை 10,050 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.