எந்த கொம்பனாலும் அ.தி.மு.க-வை தொட முடியாது - எடப்பாடி பழனிசாமி
எந்த கொம்பனாலும் அ.தி.மு.க வை தொட முடியாது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் எடப்பாடி
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் திருச்சி வந்தார். அவருக்கு விமான நிலையத்திலிருந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து திருச்சி வயர்லெஸ் சாலையில் தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அதில் பேசிய அவர்,
எந்த கொம்பனாலும் அ.தி.மு.க வை தொட முடியாது
தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் தி.மு.க ஆட்சியில் எந்த ஒரு திட்டங்களும் செயல்படுத்தப்பட வில்லை. அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு தான் தற்போது ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார்கள்.

நாம் ஆரம்பித்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள். அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட இன்னும் பல திட்டங்கள் முடங்கி இருக்கிறது. அவற்றை விரைவாக முடிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
தமிழகத்தில் நிதி இல்லை என்கிறார்கள் ஆனால் ரூ.80 கோடி செலவில் பேனா நினைவு சின்னம் வைக்கிறார்கள். பேனா வைப்பதை குறை சொல்லவில்லை. முக்கியமான தலைவர் நினைவாக அது வைப்பது தவறில்லை ஆனால் அதை குறைந்த செலவில் வைக்க வேண்டும். 80 கோடி ரூபாயில் வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தலாம்.
தி.மு.க ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி உள்ளார்கள் அது தான் இந்த ஆட்சி மக்களுக்கு கொடுத்த போனஸ். மின் கட்டணத்தை உயர்த்தினால் தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்கு சென்று விடும். அதனால் தொழில் வளர்ச்சி பாதிப்படையும். திட்டமில்லா செயல்பாடு தான் இந்த ஆட்சியில் உள்ளது.
தமிழ்நாட்டில் அதிக கடன் இருப்பது தெரிந்து தான் தேர்தல் வாக்குறுதி அளித்தார்கள் ஆனால் அதை வைத்து ஆட்சிக்கு வந்த பின்பு தற்போது நிதி இல்லை என்கிறார்கள். விவசாய கடனை அதிமுக அரசு ரத்து செய்தது. ஆனால் திமுக அரசு விவசாயிகளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.
விவசாயிகளை ஏர் எடுத்து பார்ப்பதில்லை. அ.தி.மு.கவை சிலர் பிரிக்க பார்க்கிறார்கள். எந்த கொம்பனாலும் அ.தி.மு.க வை தொட முடியாது. சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக உடன் கூட்டு வைத்து கொண்டு அ.தி.மு.க வை பிளக்க பார்க்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது.
சிலர் கட்சியில் இருந்து வெளியே சென்றார்கள். அ.தி.மு.க வை எதிர்த்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வாக்களித்தார்கள். இருந்த போதும் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் விருப்பப்படி அவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து உயர்ந்த பதவிகளை வழங்கினோம் ஆனால் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறும் கதையாக மாறிவிட்டது. நான் தொண்டர் என நிலையிலிருந்து தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன்.
தொண்டர்கள் மன நிலை எனக்கு தெரியும். ஒ.பி.எஸ் போல் எத்தனை பேர் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது. அ.தி.மு.க வை அழிக்க நினைப்பவர்களுக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.