இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் திட்டமில்லை - உலக வங்கி திட்டவட்டம்..!
இலங்கைக்கு புதிய நிதியுதவி வழங்கும் திட்டமில்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாடு கடும் சிக்கலில் சிக்கி தவித்து வருகிறது.

அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி அதிபர் கோட்டபய ராஜபக்ச பதவி விலக கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது வன்முறை வெடித்தது.
இதையடுத்து பதவியிலிருந்து ராஜபக்ச விலகியதை தொடர்ந்து புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்கே கடந்த 12-ந் தேதி பதவியேற்றார்.அவரை நிதி அமைச்சராகவும் அதிபர் கோட்டபய ராஜபக்ச நியமித்தார்.
ஏறத்தாழ 7 பில்லியன் டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.52,500 கோடி கடன் தவணையை திருப்பி செலுத்த வேண்டியதை இலங்கை நிறுத்தி வைத்துள்ளது.
நாட்டின் மொத்த கடன் 51 பில்லியன் டாலராக (சுமார் ரூ.3 லட்சத்து 82 ஆயிரத்து 500 கோடி) உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வர 5 பில்லியன் டாலர் (ரூ.37,500 கோடி) நிதி தேவைப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கையில் போதுமான பொருளாதார கட்டமைப்பை உருவாக்கும் வரை புதிய நிதியுதவி வழங்கும் திட்டம் இல்லை என உலக வங்கி அறிவித்துள்ளது.
இது குறித்து விளக்கமளித்துள்ள உலக வங்கி, இலங்கையில் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான பொருத்தமான கொள்கைகளை வகுக்க ஆலோசனை வழங்கப்படும் எனவும்,
ஆனால் இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் புதிய பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.