வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் இந்திய அணிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை - நொந்துபோன ரசிகர்கள்
வரலாற்று சிறப்புமிக்க ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில் அங்கு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டிகள் பிப்ரவரி 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னாப்பிரிக்கா தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்வியால் துவண்டு போன இந்திய அணி மீண்டும் ஏற்றம் காண இந்த தொடர் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் போட்டிகள் அனைத்துமே அகமதாபாத் நகரிலும், டி20 போட்டிகள் அனைத்தும் கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளன.
முன்னதாக கொல்கத்தாவில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மைதானங்களில் 75% ரசிகர்களுக்கு போட்டியை நேரில் கண்டுகளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்திய அணி பிப்ரவரி 6 ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் ஒரு நாள் போட்டியில் பங்கேற்பதன் மூலம் தங்களது 1000 ஆவது ஒருநாள் போட்டியை விளையாட உள்ளது. இந்நிலையில் அகமதாபாத் நகரில் நடைபெறும் இந்த 3 போட்டிகளை காண ரசிகர்களுக்கு மைதானத்தில் அனுமதி இல்லை என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக வரலாற்றிலேயே முதல் முறையாக 1000வது ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி ரசிகர்கள் இன்றி வெறும் மைதானத்தில் இந்த போட்டியை எதிர்கொள்ளும் மோசமான நிலையை சந்தித்துள்ளது