தடுப்பூசி இல்லையென்றால், சம்பளமும் இல்லை' - உ.பி. மாவட்ட நிர்வாகம் அதிரடி..!
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியில் மாநில அரசுகளும், மத்திய அரசும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மேலும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, இந்தியாவில் பல மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன.

அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் பிரோசாபாத் மாவட்ட நிர்வாகம், ‘தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தரப்படாது’ என்ற தடாலடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது குறித்து, அம்மாநிலத்தின் தலைமை மேம்பாட்டு அதிகாரி பேசுகையில், மே மாத சம்பளத்திலிருந்தே சம்பளப் பிடிமானம் செய்யப்படும் என கூறியுள்ளார். இந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, சம்பளம் நிறுத்தப்பட்டுவிடுமோ என்ற பயம் காரணமாக, அனைவரும் தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவதாக கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக ஏற்கெனவே எடவாக் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மது விற்பனை செய்ய வேண்டாம் என அம்மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தியிருந்தனர்.

இதுபற்றி அப்பகுதியின் வட்டார அதிகாரியான ஹேம் சிங் கூறுகையில், ‘45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டையை காட்டினால் மட்டுமே, அவர்களுக்கு மது வழங்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
தடுப்பூசியை மக்கள் போட்டுகொள்வதற்காக, அந்தந்த மாநில அரசு, புது புது வித்தைகளை கையாளுகிறது.
